மிக்ஜாம் புயல் பாதிப்பு: ‘ரூ.6 ஆயிரம் நிவாரணம் பத்தாது ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வேண்டுகோள்..!

0
122

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு அரசு 6ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நிவாரணத் தொகையை அதிகரித்துத் தரவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மிக்ஜம் புயல் கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன் பேடி அந்த நிவாரணத் தொகையை நியாயவிலைக்கடை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நாளை (டிச 17) தொடங்கவுள்ளது.

முதற்கட்டமாகச் சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் .

இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார். மேலும், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு கொடுத்த 900 கோடி ரூபாயில் மத்தியரசின் பங்களிப்பு 75 விழுக்காடு உள்ளது. எனவே புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு அரசு 10ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர் தமிழ்நாடு அரசைப் பாராட்டியது சம்பிரதாயமானது. இதில், மாநில அதிகாரிகள் வழங்கிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்யவே மத்திய குழுவினர் வந்தனர். எனவே மத்திய குழுவினர் கூறியதை பாஜக ஏற்றுக்கொள்ளாது, இந்த பேரிடரைக் கையாண்டதில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here