மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.450 கோடி.. பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
68

Chennai floods: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசுக்கு, 450 கோடி ரூபாயை அளித்த, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிச.07) ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறோம்.

தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயலால் சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

அதனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450 கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அலுவலர்கள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்துள்ளேன்.

இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட மத்திய அரசின் குழு ஒன்றும் தமிழகத்துக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து மத்திய அரசு விரைவில் வழங்கிடும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here