‘ஹிந்தி தான் தேசிய மொழி’.. தமிழ் பெண் அவமதிப்பு.. மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு உதயநிதி கண்டனம்!

0
144

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் மொழி குறித்து விவாதம் செய்த மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை வீரர் மீது உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள், பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சென்ற தமிழ் பெண்ணிடம், ஹிந்தி மொழிதான் தேசிய மொழி என வாதிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்குத் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவா விமான நிலையத்தில் மத்திய தொழில் படை வீரர்கள் ஹிந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், ‘ஹிந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா’ எனக் கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில் படையே தவிர ஹிந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது ஹிந்தியைத் தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

இத்தகைய போக்கினை மத்திய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here