கைதாகும் மஹுவா மொய்த்ரா எம்பி? அதானி குறித்து கேள்வியெழுப்ப லஞ்சம்! விசாரணையை தொடங்கிய சிபிஐ

0
144

டெல்லி: அதானி குறித்து கேள்வி கேட்க தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அடுத்ததாக அவர் மீதான லஞ்சப்புகார் குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் மஹுவா மொய்த்ரா கைது செய்யப்பட உள்ளாரா? என்ற பரப்பான கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா எம்பியாக உள்ளார்.

இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பிரதமர் மோடியையும், அதானியையும் தொடர்புப்படுத்தி பேசி வந்தார். இதற்கிடையே தான் மஹுவா மொய்த்ரா மீது பரபரப்பான புகார் கிளம்பியது. அதாவது அதானி குறித்து லோக்சபாவில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா எம்பி, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி புகாரளித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. மஹுவா மொய்த்ரா, நிஷி காந்த் துபே உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து 479 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 4ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த அறிக்கையின் மீது லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா நடவடிக்கை எடுக்க உள்ளார். இதற்கிடையே தான் தற்போது மஹுவா மொய்த்ராவுக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான புகார் குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. விரைவில் மஹுவா மொய்த்ரா எம்பி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் மஹுவா மொய்த்ரா எம்பி தற்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here