சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று (ஜன.25) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் கட்சியை பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாம் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என விஜய் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, பணிகளை செய்யும்போது தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.