சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி இல்லை அவர் ஆர்எஸ்எஸ் ரவி; ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ்-ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார்.
ஆர்.என்.ரவி முகத்தில் பூசாரிகள் கரியைப் பூசியுள்ளார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை மறைக்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நடந்துள்ளது.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று இந்திய மக்களை கோஷமிட வைத்துள்ளனர். அயோத்தியில் நேற்று நடைபெற்றது பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றப்பட்ட அவலம். அப்பாவி இந்து மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக மாண்புகள் சிதைக்கப்பட்டும்.
மேலும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இன்மை, பொருளாதார வீழ்ச்சி, உலக அரங்கில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள பண மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப பாஜக முயல்கிறது. இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன” என கூறியுள்ளார்.