மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.,15) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுபிடி வீரர்கள், 900 காளைகள் பங்கேற்றனர். வாடிவாசலில் சீறிபாய்ந்த காளைகளை, வீரர்கள் துணிவுடன் அடக்கினர்.
தொடர்ந்து இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தவர் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டு தமிழ்நாட்டில் நடத்த காரணமான அனைவருக்கும் நன்றி. என் உடலில் பல காயங்கள் இருந்தாலும், எனது ஊர் பெருமைக்காக தொடர்ந்து போட்டியில் பங்கேற்கிறேன்’ என்றார்.
இதேபோல கடந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கார்த்திக், 17 காளைகளை அடக்கி பைக் பரிசு பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், 14 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார்.
தொடர்ந்து, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார். இதில், இரண்டாவது இடம் பிடித்த ரஞ்சித்திற்கு, வாய் பகுதியில் காளை முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளரான ஜி.ஆர்.கார்த்திக் என்பவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் அமைச்சர் பிடிஆர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.