தென்சென்னை தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு திமுக கட்சியின் கையில் சிக்கி திண்டாடுகிறது.
2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது எனக் கூற, 2024ஆம் ஆண்டு தேர்தல் முக்கியமானது. நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 43ஆவது இடத்தில் இருந்த சென்னை தற்போது 199ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
சென்னையில் வெறும் 12 விழுக்காடு குப்பைகளை மட்டுமே முறையாக அப்புறப்படுத்துகின்றனர். எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர்கள் பணியாற்றாமல் உள்ளதால் சென்னையில் வளர்ச்சி ஏற்படவில்லை.
இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். பாஜக அமைச்சரவையில் உள்ள 75 பேர் மக்கள் பணி ஆற்றக்கூடியவர்கள்.
ஆனால் ஸ்டாலினின் அமைச்சரவையில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் அற்றவர்களே இருக்கின்றனர். குடும்ப ஆட்சியில் ஒருவரை அறிவாளியாக காட்ட வேண்டும் என்றால், அவரின் அருகில் கோமாளிகளை உட்கார வைக்க வேண்டும்; அதுவே தமிழ்நாடு அமைச்சரவை.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் போட்டுக்கொண்டிருந்தார். உதயநிதி மீது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனம் உள்ளது. ஆட்சியின் மீது அல்ல.
உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். வெள்ள பாதிப்பு, நிகழ்ச்சி என அனைத்திலும் உதயநிதியை அறிவாளி என பில்டப் காட்டும் போட்டோ தேவைப்படுவதால் அவரை முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.