சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது. இந்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நாங்கள், எஸ்.டி.ஆர்.எப் மற்றும் என்.டி.ஆர்.எப் குழுக்களை திரட்டியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. எனவே ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும்.
தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன.
இந்த பேரிடரின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூடப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக வழங்க கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.