சென்னையில் ரசாயன வாயுக்களை சுவாசித்த மக்கள் மயக்கம்..! அடுத்தடுத்து நடந்த சோகம்..! என்ன நடந்தது?..

0
97

Ammonia gas leak: சென்னையை அடுத்து எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கோரமண்டல் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உரத்தைத் தயாரிப்பதற்காக ரசாயன வாயுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று (டிச.26) நள்ளிரவு உரத் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றில் நெடியுடன் கூடிய வாயு கலந்துள்ளது. இதனை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு தலை சுற்றுதல், வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பெரிய குப்பம் மற்றும் சின்ன குப்பம் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

முன்னதாக தொழிற்சாலையில் இருந்து இரவுப் பணியை முடித்துவிட்டு வந்த ஊழியர்கள் தான் ரசாயன வாயு கசிவை உணர்ந்துள்ளனர். உடனடியாக அவர்கள் ஓடிச் சென்று அருகில் வசிக்கும் மக்களை எச்சரித்து அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக அமோனியம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அனுமதி இல்லாமல் அமோனியா கொண்டு வரும் பைப் லைன்களை இயக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூடக்கோரி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய சிகிச்சைகள் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டில் கழிவறை சுத்தம் செய்கின்றனர்’ – தயாநிதி பேச்சுக்குக் குவியும் கண்டனங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here