சென்னை: தமிழ்நாட்டில் வரும் டிச.26ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (டிச.20) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நாளை (டிச.21) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.22ஆம் தேதி முதல் டிச.26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.