திருநெல்வேலி மழை பாதிப்பு: ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

0
109

Tirunelveli Rain: திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையாத நிலையில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகளை எதிர்கொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, வெள்ள பாதிப்புகளைச் சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தது. வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தினசரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் அந்த மாவட்ட மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், திருநெல்வேலியில் ஆங்காங்கே தண்ணீர் படிப்படியாக வடிந்து வருவதால் இன்று 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாலும், ஒரு சில இடங்களில் வெள்ளநீர் வடியாததாலும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here