பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு தொடங்கி இருக்கைகள் வேகமாக நிரம்பியது.
இதனையடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது. இதனால், காலை முதலே பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
மேலும், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2ஆயிரத்து 100 பேருந்துகளுடன் கூடுதலாக 901 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக நேற்று இரவு 7 மற்றும் 8ஆவது நடைமேடைகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
போதுமான இருக்கைகள் வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பயணிகள் உடமைகளை எளிதில் எடுத்துச்செல்ல ஆங்காங்கே ‘டிராலி’ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை அழைத்துச்செல்ல 5 பேட்டரி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, பேருந்துகளில் ஏறி பயணிகளின் கருத்துகளை கேட்டறிந்து, பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட முதல் நாளான நேற்று சென்னையில் 2.17 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகளவில் கூடியதால் நேற்று ஆலந்தூர் நோக்கி செல்லும் சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேருந்து நிலையங்கள் மட்டுமல்லாது சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.