பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தங்கி பணியில் ஈடுபடுபவர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.
இதனால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 8ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, சென்னையில் இருந்து இன்று (ஜன.12) முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 11ஆயிரத்து 006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. முன்னதாக தினசரி இயக்கப்பட்ட 2ஆயிரத்து 100 அரசு விரைவு பேருந்துகளுடன் தற்போது 4ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனால், மொத்தம்19ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தேவையான சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், கிளாம்பாக்கம், மாதவரம், சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய ஆறு இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம், திருவண்ணாமலை, சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
அதேபோல், பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு சென்னை திரும்பவுள்ள மக்களுக்காக ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 3 நாட்களும் மொத்தம் 11ஆயிரத்து 130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.