போகிப் பண்டிகை தினமான இன்று (ஜன.14) பிளாஸ்டிக், டயர், சைக்கிள் டியூப் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர்.
இதனால் காற்று மாசு படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகையின்பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் போன்ற பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இவற்றை வைத்து எரிக்கப்படுவதால் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்களும், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகையால், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க பொதுமக்கள் உதவவேண்டும். மேலும், காற்று தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.