போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிக வாபஸ்..

0
182

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஓடின. இன்றும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி, இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி கோரிக்கையை ஏற்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என தொழிற்சங்கங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

அதன்பின் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முடிவு பெறாத நிலையில் வரும் 19ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? போராட்டம் நடத்த உரிமையுள்ளது ஆனால் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது சரியில்லை என கூறினர்.

மேலும் அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருகின்றீர்கள்? தீர்வு காண்பதில் என்ன பிரச்சினை உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான் நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாத அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து 2.15 மணிக்கு நடந்த அமர்வில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நாளைக்கு கட்டாயமாக பணிக்கு திரும்புவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் ஜனவரி 19ஆம் தேதிவரை வேலை நிறுத்தத்தில் கட்டாயம் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here