உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரம்மாண்டமாக திறக்கப்படவுள்ளது. இந்த ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், இந்த விழாவில் கலந்துகொள்ள நாட்டின் மிக முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலை நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சுத்தம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. ராமரை தரிசனம் செய்ய சுமார் 500 ஆண்டுகளாக நாம் காத்திருக்கிறோம். தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் ராமரை பார்க்க உள்ளோம்.
ராமர் கோவில் சாதி மதம் சார்ந்தது கிடையாது. இந்திய மக்களின் ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக கட்டப்பட்டு உள்ளது. அயோத்தியில் கூட வேறு மதங்களை சார்ந்தவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்க உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இந்த நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.
ராமர் கோவிலை கட்டியதால் பிரதமர் மோடிக்கு பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. 92 வயதான எனது அத்தை நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசீர்வதித்தார். இந்தியர்களின் ராமர் கோவில் ஒற்றுமை, மதச்சார்பின்மையை வெளிக்காட்டும் விதமாக கட்டப்பட்டுள்ளது” என்றார்.