சென்னை: மத்திய அரசு ஆண்டு தோறும் விளையாட்டுத்துறையில் சாதிப்போருக்கு உயரிய விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் பெற்றார்.
இந்த நிலையில், இன்று கவிதா செல்வராஜை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “விளையாட்டுத்துறையில் சாதிப்போருக்கு ஒன்றிய அரசு ஆண்டு தோறும் உயரிய விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கபடி பயிற்சியாளர் சகோதரி கவிதா செல்வராஜை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வாழ்த்தினோம்.
சர்வதேச அளவில் இந்திய பெண்கள் கபடி அணி பல்வேறு சாதனைகள் படைப்பதற்கு பக்கபலமாக திகழ்ந்து வரும் சகோதரி கவிதா செல்வராஜின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.