இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1953ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றவர். 1947ஆம் ஆண்டு நடந்த போரில் படைகளை வெற்றிக்கு வழிநடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 2016ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.
கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்கள் பேரணியுடன் கூடிய 8ஆவது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த விழா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை நடக்கிறது.
போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர் நீத்தவர்களின் உன்னதமான தியாகம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் மரியாதை செலுத்துகிறார்.
இந்த விழாவை, ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், கவுகாத்தி, மும்பை, செகந்திராபாத் மற்றும் கொச்சி ஆகிய நாடு முழுவதும் 10 இடங்களில் முப்படைகளும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.
செகந்திராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தலைமை தாங்குகிறார். டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. முக்கியமாக இந்த நிகழ்வில் முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் ‘வி ஃபார் வெட்டரன்ஸ்’ கீதமும் இசைக்கப்படும்.