‘எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை உடையவர் விஜயகாந்த்’ – நடிகர் நாசர் இரங்கல்!

0
72

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செய்தி கேட்டவுடன் உண்மைதானா என ஆயிரம் பேரை கேட்டுத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டபோது மனத்தளர்வு ஏற்பட்டது. இதுவேதான் கேப்டன் என்ற பெயரை அறிந்தவர்க்கெல்லாம் ஏற்பட்டிருக்கும்.

முரட்டுத்தனமான நேர்மை எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை, களைப்பில்லா உழைப்பு, தமிழ் திரையுலகத்தின் முக்கியத்தூண் அடையாளமற்று கிடந்த அடையாறு திரைப்படக் கல்லூரியின் இரும்புக் கதவை திறந்து விட்டவர். அதிகமான திரைப்படக் கல்லூரி இயக்குநர்களை அழைத்து வந்தவர்.

கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புது ரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது. அவரால் பசிதீர்ந்த பல்லாயிரம் நல்மனங்கள் இன்று அவரை கண்ணீரோடு நினைவு கூறும். அவர்கள் வேண்டுதல் அவரை இறையின் பக்கம் கொண்டு நிறுத்தும்.

அரசியல் களம் ஒரு போர்க்களம் என தெரிந்தும் நிராயுதபாணியாய் மக்கள் நலமே தன் பலமென துணிவோடு ஒரே நோக்காய் செயல்பட்டவர். ஏழைகளின் குரலாக, நலிந்தோரின் துணையாக கடைசி மூச்சுவரை ஓங்கி ஒலித்தவர் இன்று நம்மோடு இலையே என்ற உண்மை நற்பகலை காரிருள் கவ்வுகிறது நமக்கே ஆறுதல் வேண்டும் போது ஆறுதலை யாருக்கு அளிக்கமுடியும்.

அவரின் மறைவு தந்த குடும்பத்தாரின், நண்பர்களின், தொண்டர்களின், தோழர்களின் துக்கத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்து மனம் உருகி மரியாதை செலுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்!.. விஜயகாந்தை காண சென்னைக்கு ஓடோடி வந்த ரஜினி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here