பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம்..! திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?..

0
130

தமிழ் சினிமா நடிகையும், தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்தார். பாஜக உள்கட்சி விவகாரம் காரணமாக இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.

மேலும், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குரல் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், பாஜக இதற்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தது. இதனால், பாஜக மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022ஆம் நவம்பர் மாதம் கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாஜகவில் இருந்து விலகினார். அந்த நாள் முதல், பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.

இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக அதிமுக இருக்கிறது.

இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது.

50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here