‘Actress Anushka Shetty’: தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறையத் தொடங்கியது.
நடிகை அனுஷ்கா, ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு தனது உடல் எடையை கூட்டியிருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அப்போது கூடிய எடையை அவரால் குறைக்க முடியவில்லை.
இதனால், தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை குறிப்பிட்ட படங்களில் மட்டும் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த நிலையில் அனுஷ்காவின் 50ஆவது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, தெலுங்கு இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா தனது 50ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனுஷ்கா ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.