Delhi Chief Minister Arvind Kejriwal: பாஜக-வில் சேருமாறு என்னை சிலர் கட்டாயப்படுத்தினார்கள் என்றும் நான் ஒருபோதும் பாஜகவில் சேரப்போவதில்லை எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கெஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இது குறித்த விசாரணையையும் குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவது இல்லை.
பாஜகவில் சேர்ந்து விடுங்கள்.. விட்டு விடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், ஒருபோதும் பாஜக-வில் சேரமாட்டேன் என்று அவர்களிடம் நான் உறுதியாக கூறிவிட்டேன். நான் ஒருபோதும் பாஜகவில் சேரப்போவதே இல்லை” என்றார்.