Makkal Needhi Maiam: நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ‘இந்தியா’ கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு சீட்டு ஒதுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியவரும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ‘கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்ச் 7ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. தொடர்ந்து, இந்த கூட்டம் வேறு ஒரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளனர்.