உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் அதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்புத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ‘X’ தளத்தில் பதிவு இன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபுவின் பதிவிற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதில், “சேகர் பாபு அவர்களே, உங்கள் பதிவுக்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன், ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள்.
இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது.
மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கே இருந்து அனாவசிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலையத்துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பாற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.