ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்களுக்கு கடைகள் அடைப்பு..

0
180

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ளார். ஜனவரி 20ஆம் தேதி காலை 10.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.

அங்கு ரெங்கநாதரை தரிசித்துவிட்டு, அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்யவுள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் ராமேசுவரத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், இன்றும், நாளையும் கடைகளுக்கு விடுமுறை என உரிமையாளர்கள் பேப்பரில் எழுதி கடையின் முன் ஒட்டியுள்ளனர்.

சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமரின் வருகையையொட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் வருகிற 20ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள பிரசாத கடைகள், புத்தக கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here