மீண்டும் ஆர்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள்.. பேச்சுவார்த்தை முடிவுகள் என்ன ஆனது?..

0
115

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் உள்ளது.

அதனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு செவி சாய்க்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது தொடர்மாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்த நிலையில், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தயாராக இல்லை என கூறி வரும், 30ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின், ஆறு கோரிக்கைகள் தொடர்பான, 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில், “ஊதிய ஒப்பந்த பேச்சு தொடர்பான கோப்புகள், நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிப்ரவரி 6ஆம் தேதி, அகவிலைப்படி உயர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறோம்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது” என கூறப்பட்டது. மேலும், இது தொடர்பாக அடுத்த கட்டமாக, பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இது குறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் வராதது வருத்தம் அளிக்கிறது. காலவரைக்கு உட்பட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்பது தெரிகிறது.

இது எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் வரும் ஜனவரி 30ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்த இருக்கிறோம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here