தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகள் குறித்து அவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழ்நாட்டி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், 10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த 29ஆம் தேதி சென்றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது.
அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள். மாநாட்டில் தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக்கூடிய உகந்த சூழல் பற்றி எடுத்துக்கூறி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் நாட்டில் செயல்படுகின்ற முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள். இந்த முயற்சிகளின் பயனாக, ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.