Thalapathy Vijay: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் விஜய் நேற்று (டிச.30) தொடங்கி வைத்திருக்கிறார்.
திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையாத நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் மாதம் முழுவதும் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி கேடிசி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்துகொண்டார். பின்னர், மழை வெள்ள பாதிப்பு குறித்து நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 900 பேர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 600 பேர் என மொத்தம் ஆயிரத்து 500 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரமாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஏற்பாடுகளை செய்ததாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சுமார் 20 வாகனங்கள் மூலம் அவர்களது வசிப்பிடத்தில் இருந்து நிவாரணம் வழங்கும் மண்டபத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நிவாரணம் பெற வந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணத்தொகை பலருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடியில் மக்கள் பணியின்போது ஜெனரேட்டரை இயக்கியபோது உயிரிழந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு விஜய் வழங்கினார்.
அப்போது ஒரு பெண்ணிடம் நிதி வழங்கியபோது, அந்தப் பெண் விஜய்யின் கையை பிடித்து முத்தமிட்டார். பின்பு, விஜய்யை பார்த்த குஷியில் துள்ளி குதித்து அவரின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தார். பின்பு மளிகை பொருட்களை வாங்கிச் சென்றார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் விஜய் தொடங்கியிருக்கிறார். அந்த ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நடிகர் விஜய்!