அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்..!

0
50

Imran Khan: அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து வரும் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தார்.

இம்ரான் கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று, சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து சிறையிலிருந்து வந்தார். இந்த சூழலில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக இந்த மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளான சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

அதன்படி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here