இஸ்ரேல் தாக்குதல்: 20 ஆயிரம் பேர் பலி.. காசாவில் நடப்பது என்ன?

0
84

பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாகப் பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் எனச் சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீண்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்களுக்குப் போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

தற்போது முதல் தெற்கு காசவைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்த சூழலில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியது.

இதில் அந்த குடியிருப்பு தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை, அந்த குழந்தையின் 2 வயது அண்ணன் உள்பட 27 பேர் பலியாகினர். மேலும் அந்த குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்படப் பலர் படுகாயம் அடைந்தனர்.

போரின் நடுவே பிறந்த குழந்தைக்குப் பெயர் கூட வைக்காத நிலையில் போரிலேயே பலியான சம்பவம் குழந்தையின் குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8ஆயிரம் குழந்தைகள் மற்றும் 6ஆயிரத்து 200 பெண்கள் அடங்குவர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here