எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்.. பணம் வாங்கிக்கொண்டு கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு!

0
148

Mahua Moitra: திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்சியாக இன்று (டிச 08) அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவருடைய மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.

மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி நாடாளுமன்ற இணையத் தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபனைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே, மக்களவையில் பாஜகவைச் சேர்ந்த விஜய் சோங்கர் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் கூடியபோது அவையில் கடுமையான அமளி நிலவியது. மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவாவுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைக் குழுவின் அறிக்கையை ஏற்கப்படுகிறது. மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அறமற்றது, அநாகரிகமானது. அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மஹுவா, “என் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவில்லை. எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனக்கு நாடாளுமன்றத்தில் பேசக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரின் உரிமையையும் மத்திய அரசு பறிக்கிறது. அதானி என்ற ஒருவருக்காக மட்டுமே இந்த அரசாங்கம் இயங்குகிறது” என குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here