இந்தியாவில் 76 விழுக்காடு மக்கள், பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக ‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
‘சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு’ என்ற கருத்துக் கணிப்பு பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த தலைவர்களுக்கு ஆதரவும் செல்வாக்கும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய இது உதவும்.
அதன்படி சமீபத்திய பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 76 விழுக்காடு ஒப்புதலுடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18% மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6% பேர் கருத்து தெரிவிக்கவில்லை என இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்த பட்டியலில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல் 66 விழுக்காட்டுடன் 2ஆவது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் 58 விழுக்காட்டுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனத்தின் முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதமர் மோடி ‘சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு’ கருத்துக் கணிப்பில் முதலிடம் பிடித்திருப்பதால் பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.