ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அங்கீகாரமும் கிடையாது உள்ளிட்ட 3 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 3 விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு விதமான தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். அதன்படி, எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தீர்ப்பின் அடிப்படையைக் கொண்டு இந்த வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாகவோ அல்லது யூனியன் பிரதேசத்தை மாநிலமாகவோ மாற்றுவது என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் நிலவிய போர் சூழலால் இடைக்கால ஏற்பாடாகவே சட்டப்பிரிவு 370 கொண்டுவரப்பட்டதாகவும், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது என கூறிய உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தில் உள்ள அனைத்து சட்டப்பிரிவுகளும் ஜம்மு – காஷ்மீருக்கும் செல்லும் எனவும், ஜம்மு- காஷ்மீருக்கு என தனி இறையாண்மை கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ரத்து செய்தது செல்லும் எனவும், இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அங்கீகாரமும் கிடையாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.