“13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்” – பிரதமர் மோடி பெருமிதம்!

0
166

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்றும் (டிச.08) நாளையும் (டிச.09) நடைபெறுகிறது. மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அங்கிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து, மாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வைத்திருந்த கண்காட்சி மையத்தை பார்வையிட்டார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “ 21ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் (2021-2030) உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சொந்தமானது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்களிடம் நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைக்கிறது. தெய்வீக பூமியான உத்தரகாண்ட் நிச்சயம் உங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும்.

வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதற்கு உத்தரகாண்ட் சிறந்த எடுத்துக்காட்டு கடந்த சில ஆண்டுகளில் இந்தியா பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மறுக்கப்பட்டவர்களுக்கு தற்போது நலத்திட்டங்களும் தொழில் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ‘vocal for local’ and ‘local for global’ மந்திரம் மூலம் இந்தியப் பொருள்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியத் தயாரிப்புகள் உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டியிடுகிறது. நமது நாடு வளர்ச்சிப் பெற நிலையான ஆட்சி அவசியம் என மக்கள் உணர்ந்துள்ளதை தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here