Bhagyaraj: இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கா’. ஆண்ட்ரியா இந்த படத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக நடித்திருக்கிறார்.
மிகவும் ஆக்ஷன் நிறைந்த கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது. இந்த ‘கா’ படம் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பாக்யராஜ் பேசுகையில், “இந்த படத்தில் ஆண்ட்ரியா எந்த அளவிற்கு கடினமாக உழைத்தார் என்பதை இயக்குநர் கூறினார், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்ட்ரியா எனது வாழ்த்துக்கள்.
அந்த காலத்தில் பெண்கள் நடிப்பில் வெளியான ஆக்சன் படங்கள் எனக்கு பிடிக்கும். ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களெல்லாம் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியாவின் இந்த ஆக்சன் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள படம் மலையாளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக நாட்கள் ஓடியுள்ளது. மக்கள் ரசிப்பதால் தான் அந்த மாதிரியான படங்கள் இங்கு ஓடுகிறது. ஆனால், நம்ம ஊர் எழுத்தாளர் அதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
படத்தை மட்டுமின்றி கேரள மக்களையும் சேர்த்து விமர்சித்துள்ளார். பெரிய எழுத்தாளர் இந்த மாதிரி பேசுவது மனதுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. இதை இப்போது சொல்லக் காரணம், இந்த விவகாரத்திற்கு தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லை என கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது” என பேசினார்.