Bus Accident: தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு படையெடுத்துச் செல்கின்றனர். மேலும், நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் 11ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. தொடர்ந்து, 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்,
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.