‘எங்கிருந்தாலும் தாய் மண்ணிற்கு உதவுங்கள்’ – ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

0
104

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து அங்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வந்திருக்கிறேன். ஆனால், பலமுறை வந்ததுப்போல உணர்வைத் தருகிறது.

கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழும் உங்களுக்கும் அது பெருமைதான்.

பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்திருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here