செங்குன்றத்தில் தவித்த மக்களை படகு மூலம் மீட்பு

0
108

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சுற்றிய பகுதியில் நேற்று இரவில் பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த நிலையில் தீயணைப்பு துறையில் ரப்பர் படகு மூலம் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து தொடர்ந்து பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இதனால் பல சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதோடு நேற்று இரவிலும் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை தியாகராய நகர், மாம்பலம், மந்தைவெளி, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி வெள்ளமாக ஓடியது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து இரவோடு இரவாக மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வெளியேற்றும் பணியை தொடங்கினர்.சென்னையை பொறுத்தமட்டில் 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதோடு சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழை நீர் தேங்கியது தொடர்பாக வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதியளித்தார்.மேலும் மீட்புப் பணியில் களமிறங்க கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பகுதிகளில் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். சென்னையை போல் அண்டை மாவட்டமான திருவள்ளூரிலும் நேற்று இரவு பேய் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் செங்குன்றத்தில் உள்ள பாலவாயல் பகுதியில் 50க்கும் அதிகமான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி வெள்ளமாக காட்சியளித்தது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். அதோடு வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவானது. இதையடுத்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்பு பணியை தொடங்கினர். மழைநீர் தேங்கிய வீடுகளில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் என 100க்கும் அதிகமானவர்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து அருகே உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here